search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளம் மாயம்"

    தாராபுரம் அருகே சினிமா படபாணியில் குளத்தை காணவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் தாளக்கரை செல்லும் ரோட்டில் செட்டிக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை வெட்டி தூர்வாரி தரும்படி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் குளம் வெட்டப்படவில்லை.

    கடந்த 18-ந் தேதி தெக்கலூரில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செட்டிகுளத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ 4 லட்சத்து 96 ஆயிரம் செலவில் குளம் வெட்டப்பட்டதாக அதிகாரிகள் அறிக்கை வாசித்தனர். வெட்டாத குளத்துக்கு அதிகாரிகள் அறிக்கை வாசித்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதனையடுத்து நஞ்சியம்பாளையம் ஊராட்சி கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது குளம் வெட்டியதாக அரசு பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று கிராம மக்கள் ஒன்றுதிரண்டு தங்கள் கிராமத்தில் இருந்த குளத்தை காணவில்லை. எனவே அதனை கண்டுபிடித்து தரும்படி புகார் மனு அளித்தனர்.

    வடிவேலு பட பாணியில் கிராமக்கள் குளத்தை காணவில்லை என புகார் மனு அளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி பொது மக்களுக்கு பதில் அளிப்பதற்காக தாராபுரம் ஊராட்சி ஒன்றிய மதிப்பீட்டாளர் சக்திவேல், உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஊராட்சி செயல் அலுவலர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், நாகேந்திரன் ஆகியோர் கிராமத்துக்கு வந்தனர்.

    அப்போது அங்கு இருந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை சிறை பிடித்தனர். தங்கள் ஊரில் வெட்டிய குளத்தை காட்டினால் தான் விடுவிப்போம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் பொதுமக்கள் இடையே 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த தகவல் கிடைத்ததும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து சிறைபிடித்த அதிகாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர். #Tamilnews

    ×